3வது மிக பெரிய கட்சியாக பாஜக தமிழகத்தில் உருவெடுத்து உள்ளது - அண்ணாமலை..!!
3வது மிக பெரிய கட்சியாக பாஜக தமிழகத்தில் உருவெடுத்து உள்ளது - அண்ணாமலை..!!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், திமுக 21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெற்றி பெறாத இடங்களில் கூட பாஜக தடம் பதித்துள்ளது.
நாங்கள் ஒவ்வொரு முக்கு, மூலையிலும் தாமரையை மலர செய்துள்ளோம். தமிழ்நாட்டில் 3வது மிக பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து உள்ளது. நம்முடைய வேட்பாளர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் வெற்றி பெறாதபோதும், நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

