#BREAKING:- இனி, பாம்புகளை பிடிக்கலாம்.. அனுமதி வழங்கியது அரசு..!
#BREAKING:- இனி, பாம்புகளை பிடிக்கலாம்.. அனுமதி வழங்கியது அரசு..!

பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாடு கருதி, தமிழக தொழில், வணிகத் துறையின் கீழ் கடந்த 1978-ம் ஆண்டு மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் துவக்கப்பட்டது.
இங்கு, கடந்த 1979-ம் ஆண்டு பாம்பு கடி விஷமுறிவு மருந்து தயாரிப்பை துவக்கி, தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, பாம்புகளின் இனப்பெருக்க காலமாக அறிவித்துள்ள ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து, மற்ற காலத்தில் பாம்புகள் பிடிக்கப்படுகின்றன.
இந்த சூழலில் பாம்புகளை பிடிக்க இருளர் இன மக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் முடங்கியது. விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடுமையான விஷமுள்ள நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்புகள் போன்ற பாம்புகளை இருளர் இன மக்கள் பிடித்துக் கொடுத்து வந்தனர். இதற்கு அனுமதி கிடைக்காததால், விஷ முறிவு மருந்து தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், விஷமுறிவு மருந்துக்கான விஷமுள்ள பாம்புகளை பிடிக்க இருளர் இன மக்களுக்கு தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணை மூலம், விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது.
அனுமதி வழங்கியதன் மூலம் இருளர் இனத்தவர்கள் பாம்பு பிடித்து கூட்டுறவு சங்கத்திற்கு கொடுப்பர். சங்கத்திற்கு கொண்டு வரப்படும் பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷம் அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

