மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா.. உலக மக்களுக்கு புதிய அச்சுறுத்தல் என எச்சரிக்கை !!
மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியா.. உலக மக்களுக்கு புதிய அச்சுறுத்தல் என எச்சரிக்கை !!

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களை இந்த கொடிய கொரோனா நோய் ஆட்டிப்படைக்க போகிறதோ என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது. கொரோனாவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதனை கட்டுப்படுத்தும் வகையில் மருந்துகளும், தடுப்பூசிகளும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி ஒவ்வொரு நோயிலிருந்தும் விடுபடவும் அல்லது கட்டுப்படுத்தி காத்துக்கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கை அதற்கான மருந்தை அறிவியல் நமக்கு தந்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் சில ஆண்டுகளாக பாக்டீரியாக்களை நம்மிடம் இருக்கும் மருந்துகளை கொண்டு அழிக்க முடியவில்லை என்ற புதிய அச்சம் இப்போது எழுந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட பாக்டீரியாக்களால் உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியவில்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியாமல் உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டில் மட்டும் 49.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 204 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக Lancet என்ற பிரபல மருத்துவ இதழ், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நம்மிடம் இருக்கும் மருந்துக்கு எதிராக பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக் கொள்வதால் நோய்க்கு எதிராக மருந்துகள் வேலை செய்வதில்லை. இதை மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial resistance) என்று கூறுகின்றனர். இதற்கு காரணமாக நாம் செய்யும் சிறு சிறு தவறுகளை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது, ஆண்டி பயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்துவதாலும், மருத்துவர் கூறிய நாட்களை விட குறைவான நாட்களுக்கு மருந்து உட்கொள்வது போன்ற காரணங்களால் நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial resistance) உருவாகிறது என்கின்றனர்.

இந்நிலையில், காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா உட்பட பல பாக்டீரியாக்கள் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கிக் கொண்டுள்ளன. இவற்றை பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். வழக்கமாக கொடுக்கும் மருந்துகளை தவிர்த்து அரிதாக பயன்படுத்தும் மருந்துகளை கொடுத்து நோய் குணப்படுத்த முயற்சி எடுக்கலாம். ஆனால் இதே நிலை தொடர்ந்தால் நம்மிடம் மருந்துகள் எதுவும் வேலை செய்யாமல் போகும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கிறார் நுண் உயிரியல் பேராசிரியர் மருத்துவர் கவிதா.
எனவே, எதிரியின் ஆயுதம் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் தன்னை தயார் செய்து நிலைப்படுத்தும், பார்முலாவை இதிலும் அமல்படுத்த வேண்டும்.
newstm.in

