வறுமையால் தடை.. சர்வதேச பளு தூக்கும் போட்டியில் சாதிக்க உதவிக்காக காத்திருக்கும் வேலூர் வீராங்கனை !!
வறுமையால் தடை.. சர்வதேச பளு தூக்கும் போட்டியில் சாதிக்க உதவிக்காக காத்திருக்கும் வேலூர் வீராங்கனை !!

வேலூரைச் சேர்ந்த பளு தூக்கும் சாதனை வீராங்கனை சர்வதேச போட்டியில் பங்கேற்க குடும்ப வறுமையால் பணம் இல்லாமல் உதவி காத்திருக்கிறார்.
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் ஜெய்பீம் தெருவில் வசித்து வருகிறார் கவிதா (22 ). சாதனை வீராங்கனையான இவர், போளூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். பல சாதனைகளை படைத்துள்ள இவர், பாதி இடிந்தும், மிச்சமிருக்கும் பகுதி எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ள ஒரு வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
பளு தூக்கும் வீராங்கனையான கவிதா, கல்லூரி, பல்கலைக்கழகம், மாநில அளவில் தேசிய அளவில் என பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் சோதனை என்னவென்றால், தான் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களையும் பெருமையுடன் மாட்டி வைக்கக்கூட வீட்டில் இடமில்லை. கவிதாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில், தாய் லட்சுமி, வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக தினக் கூலி அடிப்படையில் வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை நிலையிலும் சிறு வயது முதலே பளு தூக்குதலில் ஆர்வம் கொண்டிருந்தார் கவிதா.

காகிதப்பட்டறை பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் யுவராஜ் நடத்தி வரும் உடற் பயிற்சி கூடத்தில் சேர்ந்த கவிதா, தனது கடுமையான பயிற்சியால் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பதக் கங்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவில் ‘பெஞ்ச் பிரஸ்’ போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற கவிதா, 65 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இதன்மூலம், கஜகஸ்தான் நாட்டில் வரும் மே மாதம் நடைபெற உள்ள ‘உலக வலு தூக்கும் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேசிய அளவிலான பதக்கம் வாங்கிய கவிதாவுக்கு முதல் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆனால், குடும்பத்தின் ஏழ்மை நிலை ஒரு பக்கம் இருப்பதால் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பணம் தடையாக மாறியுள்ளது.

இதுகுறித்து வீராங்கனை கவிதா கூறும் போது, கஜகஸ்தானில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். ஸ்பான்சர் இல்லாமல் செல்ல முடியாது. யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் பதக்கம் பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், இந்த மாவட்டத்துக்கும் பெருமை சேர்ப்பேன், என கூறியுள்ளார். குறிப்பாக இந்த மாதம் 15ஆம் தேதிக் குள் ரூ.50 ஆயிரம் பணத்தை கட்டினால்தான் போட்டியில் பங்கேற்க முடியும்.
இதனிடையே, சர்வதேச போட்டியில் 70 கிலோ அளவுக்கு ‘பெஞ்ச் பிரஸ்’ பயிற்சி பெற்றுள்ளார். அவர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகமும், தனியார் நிறுவனத்தினரும் உதவி செய்ய முன்வர வேண்டும், என அவரது பயிற்சியாளரும் முன்னாள் ராணுவ வீரருமான யுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in

