சத்துணவில் வண்டுகள்.. 29 குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு.. அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்..!
சத்துணவில் வண்டுகள்.. 29 குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு.. அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்..!

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தொண்டமான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று (31-ம் தேதி) சத்துணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால், அச்சமடைந்த பெற்றோர் அங்கன்வாடி மையத்தில் குவிந்தனர்.
பின்னர், தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் தான் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய நிலையில், அங்கு வந்த சுகாதாரத்துறையினர் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 29 குழந்தைகளை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவு மற்றும் பாசிப்பயறு போன்றவைகளில் வண்டுகள் கிடந்ததாகவும், இதனாலேயே குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தைப்பேட்டை தொண்டைமான் நகர் அங்கன்வாடி பணியாளர் மீனாவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கவிதா ராமு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

