குவியும் வாழ்த்துக்கள்..!! சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகன்!
குவியும் வாழ்த்துக்கள்..!! சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகன்!

மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்திய வனத்துறை பணிக்கான தேர்வு 2021 முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நடைபெற்றது. நேர்முகத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. இதையடுத்து இத்தேர்வின் முடிவுகள் கடந்த 27-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 108 பேர் தேர்வாகியுள்ளனர்.
இதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த 30 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 14 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40 பேரும், எஸ்சி வகுப்பைச்சேர்ந்த 16 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 பேரும் தேர்வாகியுள்ளனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் - ஹேமலதா தம்பதியினரின் 2வது மகன் கிருபானந்த், இந்திய அளவில் 16-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்று இந்திய வனப் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற அவருக்கு, அவரது அப்பா தங்கராஜ் மற்றும் தாய் ஹேமலதா ஆகியோர் இனிப்புகள் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். அவருடைய அண்ணன் தயானந்தன் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமான வரித்துறையில் இணை ஆணையாளராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி ஆகிய 2 பேரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயர் பதவியில் வெற்றி பெற்று உள்ளதை அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருபானந்த் கூறுகையில், தான் கடந்த 10 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்விற்காக கடினமாக உழைத்து வந்தேன். இப்போது ஒன்பதாவது முறையாக தேர்வு எழுதியதில் வெற்றி பெற்றுள்ளேன். மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்தால் எதையும் சாதிக்கலாம். மேலும் தமிழக அரசு மாணவ- மாணவிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை முறையாக பயன்படுத்தி எந்த ஒரு தேர்வையும் எழுதி எளிதில் வென்றுவிடலாம் என்று தெரிவித்தார்.

