பேருந்து நிலையத்தில் நடந்த கொடூர கொலை.. அலறி ஓடிய மக்கள், சுற்றுலா பயணிகள் !
பேருந்து நிலையத்தில் நடந்த கொடூர கொலை.. அலறி ஓடிய மக்கள், சுற்றுலா பயணிகள் !

உதகை நகரப் பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நகரப் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அலறியடித்து ஓடினர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான உதகையில் இதுபோன்ற சம்பவங்களுக்கு காவல்துறை இடம் அளிக்கக்கூடாது என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதாவது, உதகை அருகே உள்ள மஞ்சனக் கொரை பகுதி சேர்ந்தவர் ஹரி (36), கார்த்திக் (38) ஆகிய இருவரும் நேற்று மதியம் பேருந்தில் உதகை நகருக்கு வந்துள்ளனர். பேருந்தில் இருந்து இறங்கிய கார்த்திக் மற்றும் ஹரி இருவரும், அங்குள்ள பயணியர் நிழற்குடைக்கு சென்று அமர்ந்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டு உள்ளனர்.

பின்பு, ஹரி பயணிகள் நிழற்குடையில் அமர்ந்திருந்தபோது கார்த்திக் திடீரென சாலையோரம் இருந்த பாத்திரக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து ஹரியின் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இப்பகுதியில் பேருந்துக்காக நின்றிருந்த பொதுமக்கள் இதைக் கண்டு அலறியடித்து ஓடினர். பின்பு தகவல் அறிந்த பி1 போலீஸார் சம்பவ பகுதிக்கு வந்து, இறந்த ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கத்தியால் குத்திய கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதில், கொலை செய்த கார்த்திக் என்பவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். ஏற்கெனவே பலமுறை போலீசாரிடம் அவர் நடவடிக்கைகள் குறித்து தகவல் அளித்திருந்தோம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் மெத்தனப்போக்கால் அவரது நடவடிக்கை தற்போது ஒருவரை கொலை செய்யும் அளவுக்கு மாறியுள்ளதாக கூறுகின்றனர்.
newstm.in

