வேட்பாளர்களிடம் பணம் வாங்குங்க.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
வேட்பாளர்களிடம் பணம் வாங்குங்க.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி 117-வது வார்டில், தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறி, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களை சென்னை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றிவிட்டு, அதற்கான செலவுகளை வேட்பாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

