காவல்துறையினரை ஆபாசமாக பேசி, மிரட்டிய சி.வி.சண்முகம்! – போலீசார் வழக்குப்பதிவு !!
காவல்துறையினரை ஆபாசமாக பேசி, மிரட்டிய சி.வி.சண்முகம்! – போலீசார் வழக்குப்பதிவு !!

தேர்தல் பிரச்சாரத்தின்போது காவல்துறையினரை இகழ்ந்து பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பிரமுகர்கள் பல மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொன்னதால் அவரை சி.வி.சண்முகம் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சார கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர், விழுப்புரம் மாவட்ட போலீஸாரை பொது இடத்தில் அவதூறாகவும், ஆபாசமாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தல் என 294 (பி), 504 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.வி.சண்முகம், காவல்துறை அரசின் ஏவல்துறையாக மாறிவிட்டதாகவும், மேலும் சில அவதூறான சொற்களாலும் காவல்துறையினரை இகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது.
newstm.in

