அறுவை சிகிச்சையின்போது ‘கற்பூர பொம்மை’.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அப்பல்லோ..!
அறுவை சிகிச்சையின்போது ‘கற்பூர பொம்மை’.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அப்பல்லோ..!

சென்னையைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. நல்ல குரல்வளம் கொண்ட பாடகியான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, நுரையீரல் உட்பட பல பகுதிகளில் புற்றுநோய் கட்டி பரவி இருந்தது தெரிந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையின்போது சீதாலட்சுமி, ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தில், இளையராஜா இசையில் உருவான ‘கற்பூர பொம்மை ஒன்று..’ என்ற பாடலை முணுமுணுக்கத் துவங்கினார்.

இதேபோல், இளையராஜா இசையமைத்த வேறு சில பாடல்களையும் பாடினார். இதைப் பார்த்த மருத்துவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர், “இளையராஜா மீது இந்த அளவுக்கு விருப்பமா..?” என மருத்துவக் குழுவினர் அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், “நிச்சயமாக. அவரை யாருக்குத்தான் பிடிக்காது..? அவர் ஒரு லெஜெண்ட்” என பதிலளித்துள்ளார்.
முதல் முறையாக அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர் பாட்டு பாடிய சம்பவம் நடந்துள்ளது என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின்போது சீதாலட்சுமி பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், இளையராஜாவின் தீவிர ரசிகையான சீதாலட்சுமியை இளையராஜாவுடன் சந்திக்கச் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எங்கள் தகவல் தொடர்பு குழுவினர் மருத்துவரை தொடர்புகொண்டு, ‘சிகிச்சை பெற்று வரும் சீதாலட்சுமி இளையராஜாவின் தீவிர ரசிகை என்று கேள்விப்பட்டோம்.

எனவே, அவரை நேரில் சந்திக்க இளையராஜாவின் அப்பாயின்ட்மென்ட் பெற முயற்சிக்கிறோம். இது அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, அவர் விரைவாக குணமடைய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சீதாலட்சுமியுடன் இளையராஜா இல்லத்திற்கு குழுவினர் சென்றடைந்தனர். அவரை சந்திப்பதில் சீதாலட்சுமி மிகவும் ஆவலாக இருந்தார். நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் நடந்தது.
இளையராஜாவை சந்தித்தார் அவரது ரசிகையான சீதாலட்சுமி. அவரது கதைகளைப் பகிர்ந்து கொண்டார், எங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். மேலும், சீதாலட்சுமியை மகிழ்ச்சியாக உணர வைத்தார். இது நம்மால் மறக்க முடியாத அனுபவம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

