நடிகர் சங்க தேர்தல்.. 3 ஆண்டுகளுக்கு பின்பு வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு !!
நடிகர் சங்க தேர்தல்.. 3 ஆண்டுகளுக்கு பின்பு வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு !!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது (23.06.2019). இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது.
இந்த வழக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் சுமார் மூன்று ஆண்டுகளாக எண்ணப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும், பதிவான வாக்குகளை நான்கு வாரங்களில் எண்ண வேண்டும் என்ற தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வருகிற 20ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அப்பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு அடுத்து வரும் சில நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவரது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

