சர்வதேச போட்டிகளில் பந்து வீச பிரபல வீரருக்கு தடை..!
சர்வதேச போட்டிகளில் பந்து வீச பிரபல வீரருக்கு தடை..!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் தவறான முறையில் பந்து வீசியதாக கண்டறியப்பட்டுள்ளதால் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
21 வயதாகும் முகமது ஹஸ்னைன் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசினார், சிட்னி ஸ்டேடியத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் இடையேயான பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டியில் பந்து வீசியபோது நடுவர் ஜெரார்ட் அபூட், ஹஸ்னைன் தவறான முறையில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி ஆஸ்திரேலியாவில் ஹஸ்னைன் தனது பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தார். ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியிருந்ததால், லாகூரில் உள்ள ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் அவர் சோதனை செய்யப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சோதனை ஆய்வகத்தில் ஹஸ்னைனின் பந்து வீச்சு முறையற்றது என்று கண்டறியப்பட்டது என்று தெரிவித்துள்ளது. ஹஸ்னைன் டெலிவரி செய்யும்போது அவர் தன் கை முட்டியை மடக்குவது என்பது தேவையான 15 டிகிரி வரம்பை மீறுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹஸ்னைனுக்கு ஒரு பந்துவீச்சு ஆலோசகரை வாரியம் நியமிக்கும் என்றும் இதனால் அவர் தனது பந்துவீச்சை சரிசெய்து மறுமதிப்பீட்டிற்கு தயாராக முடியும் என்று கூறியுள்ளது. அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க பட மாட்டார் என்றும் கூறியுள்ளது.

