பாஜகவில் இணைகிறார் காங்கிரசில் இருந்து விலகிய பிரபலம்..!
பாஜகவில் இணைகிறார் காங்கிரசில் இருந்து விலகிய பிரபலம்..!

குஜராத்தில், கடந்த 2015-ம் ஆண்டு பதிதார் எனப்படும் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தினார். இதில் வெடித்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த ஹர்திக் படேல், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தார். அவருக்கு, குஜராத் மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஹர்திக் படேல், சமீப காலமாக காங்கிரஸ் தலைமையை விமர்சித்தும், பாஜகவின் திட்டங்களை பாராட்டியும் பேசி வந்தார்.
கடந்த மாதம், காங்கிரசில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில், நாளை ஹர்திக் படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ரகுநாத் முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ளது. ஹர்திக் படேல் வருகை, பாஜகவுக்கு வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஹர்திக் படேல் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.

