பாலியல் வன்கொடுமை - சென்னை ஐஐடி மீது குற்றச்சாட்டு!!
பாலியல் வன்கொடுமை - சென்னை ஐஐடி மீது குற்றச்சாட்டு!!

சென்னை ஐஐடியில் கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேதியியல் துறையில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். அப்போது, உடன் படித்த மாணவர் ஒருவர் அப்பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அதுகுறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மாணவி என்பதால், கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்ற பயத்தில் மாணவரிடமிருந்து விலகி இருக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தினர்.
இதனால் துணிச்சலடைந்த அந்த மாணவர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கும் மாணவியை பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகார் அளித்தார். அதற்கு மாணவியின் சாதியை குறிப்பிட்டு திட்டியதுடன், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் பேராசிரியர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஐஐடி கல்வி வளாகத்திலுள்ள உள்புகார் கமிட்டியில் மாணவி கடந்த 2020ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். முதல் கட்ட விசாரணையை முடித்த ஐஐடி நிர்வாகம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மாணவி பாதிக்கப்பட்டதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 மாணவர்கள் உட்பட 8 பேர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.
இதனிடையே, மாணவியின் புகார் மீது விசாரணை நடத்த அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்பட்டதாகவும், சாதிப்பாகுபாடு எதுவும் நடக்கவில்லை என்றும் ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு அனைத்து விதமான வசதிகளையும் ஒத்துழைப்பையும் அவர் படிப்பை முடித்து செல்லும் வரை ஐஐடி நிர்வாகம் வழங்கும் என்றும் விளக்கமளித்துள்ளது.
newstm.in

