டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றபின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். தொடர்ந்து, அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார்.
அதன்பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மறுபடியும் டெல்லி சென்ற முதல்வர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் 2ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கும் கட்சி அலுவலகம் திறப்பு விழா அன்றைய தினம் நடைபெறுவதாகவும், அதனை அவர் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006ஆம் ஆண்டு முடிவு செய்தது.
அதன்படி, டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுக கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக அலுவலக கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அடுத்த மாதம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
newstm.in

