பாஜக அமைச்சரின் பாதுகாவலரால் தள்ளி விடப்பட்ட முதல்வர் ரங்கசாமி.. பரபரப்பு !!
பாஜக அமைச்சரின் பாதுகாவலரால் தள்ளி விடப்பட்ட முதல்வர் ரங்கசாமி.. பரபரப்பு !!

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக இதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி வந்திருந்தார்.
அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்று பின்னோக்கி வந்துக்கொண்டிருந்தார். அவருக்கு வழி ஏற்படுத்தும் விதமாக நமச்சிவாயத்தின் பாதுகாவலர் முதலமைச்சர் ரங்கசாமியை இடது கையால் தள்ளி விட்டார். இதனால் நிலை தடுமாறி பின்னோக்கி செல்லும் முதலமைச்சர் ரங்கசாமி சுதாரித்துக்கொண்டு நின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரியும் ராஜசேகர் கடந்த காங்கிரஸ் அரசில் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பாதுகாவலராக பணிபுரிந்து உள்ளார். திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயத்தின் பாதுகாவலராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திற்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும்படி பாஜக தலைமை, முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், இந்த சம்பவம் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

