கட்டுப்பாட்டை கடைப்பிடிங்க.. பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!
கட்டுப்பாட்டை கடைப்பிடிங்க.. பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்..!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. கர்நாடக அரசின் இந்த உத்தரவை உறுதி செய்து கர்நாடக ஐகோர்ட்டும் தீர்ப்பு வழங்கியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் முடிவடைந்து சற்று அமைதி திரும்பியது.
இந்நிலையில், இந்து கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வணிகர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என்று சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “அமைதி மற்றும் வளர்ச்சிக்கு கர்நாடகம் பெயர் பெற்றது.
அனைவரும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சீருடை (ஹிஜாப்) விவகாரம் முடிந்துவிட்டது. நாம் இத்தனை ஆண்டுகளாக நமது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு பொதுமக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். சமூக ரீதியாக பல்வேறு பிரச்னைகள் வரும்போது, அவற்றுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண முடியும்.
அதனால், அனைவரும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

