முதல்வருக்கு இன்று 2வது திருமணம்.. டாக்டரை மணக்கிறார்..!
முதல்வருக்கு இன்று 2வது திருமணம்.. டாக்டரை மணக்கிறார்..!

பஞ்சாப் மாநில முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் (48). இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள், தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாபில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வராக கடந்த மார்ச் 16-ம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில், பகவந்த் மான் குழந்தைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் முதல்வர் பகவந்த் மானுக்கு இன்று இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. டாக்டர் குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

எளிய முறையில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய விவிஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். பகவந்த் மானின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள பகவந்த் மானின் இரண்டு குழந்தைகளும் தனது தந்தையின் இரண்டாவது திருமணத்தை காண சண்டிகர் வர உள்ளதாக கூறப்படுகிறது.

