கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள்.. பேச்சை வாபஸ் வாங்கினார் உதயநிதி..!
கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள்.. பேச்சை வாபஸ் வாங்கினார் உதயநிதி..!

கோவை நேரு நகரில் நேற்று, திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விழாவிற்கு தலைமை வகித்தார்.
இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் 524 பேருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 10 ஆயிரம் என 52 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும், 500 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினார்.
இதையடுத்து அவர் பேசியதாவது: “நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட நான், ‘கோவை மக்களை நம்ப முடியாது; அவர்கள் குசும்பு பிடித்தவர்கள்’ என்று கூறினேன். அதை தற்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகளில் 96 இடங்களில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை கோவை மக்கள் வெற்றிபெறச் செய்தனர். அதேபோல், ஏழு நகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
சொன்னதை போலவே செந்தில் பாலாஜி செய்து காட்டியுள்ளார். இது அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல; முதல்வரின் எட்டு மாத கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 200 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

