ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மன் – கல்விக்கு மாற்று ஏற்பாடு!!
ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மன் – கல்விக்கு மாற்று ஏற்பாடு!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் தனியார் கல்லூரி சேர்மன் மாணவியிடம் வீடியோ காலில் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில், கல்லூரி மாணவிகளுடன் ஆட்சியர் மேகநாத ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் `அரசு நர்சிங் கல்லூரி’ என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ், 6 மாதத்திற்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாகவும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படும் வீடியோ தற்போது பரவியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வாயிலில் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அம்மாணவிகளை சமரசம் செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை, காவல்துறையினர் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும் கல்லூரி மாணவிகள் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு (67), இந்திய தண்டனைச் சட்டம் 354 (A),354(b),354(c),506(1), உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தினால் கல்லூரி தற்போது மூடப்பட்டு உள்ளதால் `கல்லூரியை தொடர்ந்து நடத்த வேண்டும்’ எனக்கோரி அந்த கல்லூரியில் பயின்ற சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப அருகில் உள்ள கல்லூரியில் படிப்பை தொடர் ஒரு வார காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
newstm.in

