காமெடி நடிகர் to பஞ்சாப் முதலமைச்சர்.. யார் இந்த பகவந்த் மான் ?
காமெடி நடிகர் to பஞ்சாப் முதலமைச்சர்.. யார் இந்த பகவந்த் மான் ?

காமெடி நடிகராக வாழ்க்கையை தொடங்கி பஞ்சாபின் முதல்வராக உள்ளார் ஆம் ஆத்மியின் பக்வாந்த் மன்.
பஞ்சாப் வராற்றில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 117 சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சி, 90-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முதல்வர் வேட்பாளருமான பக்வாந்த் மன்-னின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. 48 வயதான பக்வாந்த் மன், ஷஹீத் உத்தம் சிங் அரசு கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்த போது நகைச்சுவை கலைஞராக மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கல்லூரிக்காக போட்டிகளில் பரிசுகளை வென்று வந்தார்.
அரசியல், குடும்பம், விளையாட்டுத்துறை என எதையும் விட்டு வைக்காமல் நையாண்டி செய்யும் பகவந்த் மானின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பஞ்சாப் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றவை. மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

திரைப்படங்களில் நடித்து வந்த பகவந்த் மான், 2011 ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 2012-இல் லெகரே தொகுதியில் மக்கள் பஞ்சாப் கட்சி என்ற கட்சியை தொடங்கி அதன் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த கட்சி அடுத்து வந்த தேர்தல்களில் தோல்வியை தழுவியது.
2014-ல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவருக்கு, சங்ரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சிரோன்மணி அகாலிதள கட்சியின் முக்கிய தலைவர் சுக்தேவ் சிங் தின்சாவை தோற்கடித்து, மாநிலம் முழுவதும் பக்வாந்த் மன் கவனம் ஈர்த்தார்.
பின்னர் 2019 மக்களவை தேர்தலின்போதும் சங்ரூர் தொகுதியில் போட்டியிட்டு மன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் கடந்த ஜனவரி 18ஆம் தேதி பக்வாந்த் மன் அறிவிக்கப்பட்டார். அவரது எளிமை, செயல்பாடு உள்ளிட்டவைகளால் ஈர்க்கப்பட்ட வாக்காளர்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் வரலாறு காணாத வெற்றியைத் தந்துள்ளனர்.
பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சி பூசல், தேர்தல் நேர குளறுபடிகள், முதல்வர் வேட்பாளரை தாமதமாக அறிவித்தது உள்ளிட்டவை அக்கட்சி படுதோல்வியை சந்திக்க காரணமாக கூறப்படுகிறது.
newstm.in

