புதுச்சேரியில் ஆகஸ்ட் 10-ம் தேதி முழுமையான பட்ஜெட்!!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 10-ம் தேதி முழுமையான பட்ஜெட்!!

புதுச்சேரி சட்டபேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்பரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டபேரவை கூட்டத்தொடர் ஆகஸ்டு 10-ந்தேதி கூடுகிறது.
இதுகுறித்து பேரவைத் தலைவர் ஆர். செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டப்பேரவை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருகிறோம். சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கான புதிய வரைப்படம் இறுதி செய்யப்பட்டு விரைவில் பூமி பூஜை நடக்கும். அதற்கான தேதி விரைவில் தெரிவிக்கப்படும். ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை இடமாற்றம் செய்கிறோம். எனினும் இன்னும் 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை" என்று கூறினார்.