சாதிய பாகுபாடு காட்டிய கூகுள்… வலுக்கும் கண்டனம்!!
சாதிய பாகுபாடு காட்டிய கூகுள்… வலுக்கும் கண்டனம்!!

கூகுள் நிறுவனத்தில் சாதியப்பாகுபாடு இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கூகுள் நிறுவனத்தில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தலித் உரிமைகள் அமைப்பின் சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருந்தார்.
இந்நிலையில், இந்நிகழ்விற்குக் கூகுள் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேன்மொழி சௌந்தரராஜன் இந்து விரோதி என கூறி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பினர். இதையடுத்து கூகுள் நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது.

மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூகுள் மூத்த மேலாளர் தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பன்முகத்தன்மையை நிலைநாட்ட முயற்சி செய்யக்கூடாதா என அவர் கூகுள் நிறுவனத்திற்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய தேன்மொழி சௌந்தரராஜன், கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதிர்ச்சிகரமாக உள்ளது, வார்த்தையால் வெளிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
நிகழ்வை ரத்து செய்ய முயன்ற ஊழியர்களின் சாதிவெறியைக் கூகுள் நிறுவனம் ஆதரிப்பதுபோல் நடந்து கொண்டுள்ளது, இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளார். மனித உரிமைகள் பற்றிய உரையாடல்களைச் சாதிவெறியர்கள் விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் வளர்ந்தவர், அவருக்குச் சாதி பற்றித் தெரியாது என்பது நம்பும் படியாக இல்லை என கூறியுள்ளார்.
இந்நிகழ்வு சர்ச்சையானதை அடுத்து, எங்கள் நிறுவனத்தில் சாதிய பாகுபாடுகளுக்கு இடமில்லை, சாதிய பாகுபாட்டிற்கு எதிராகத் தெளிவான கொள்கையை வைத்துள்ளோம் என கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
newstm.in

