தொடரும் சோகம்.. இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை..!
தொடரும் சோகம்.. இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை..!

இலங்கையை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் 7 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு படகில் வந்து சேர்ந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயின்றி மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனால், இலங்கையில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை கடற்படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி அவ்வப்போது இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த தஸ்நேவிஸ் (40), அவருடைய மனைவி ரஜினி (39), குழந்தைகள் ஜோஸ்வா (12), ஏஞ்சல் (11), ஹன்சிகா (5), திருகோணமலை நிலாவெளி பகுதியைச் சேர்ந்த மேத்யா (40), இவருடைய மகன் சாந்தனு (7) ஆகிய 7 பேர் நேற்று இரவு தலைமன்னாரில் இருந்து ஒரு படகில் புறப்பட்டு, இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தனர். அவர்களை இறக்கிவிட்ட படகு திரும்ப சென்று விட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார், இலங்கை தமிழர்கள் 7 பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வருவாய் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.
தங்களிடம் இருந்த தங்க நகைகளை படகுக்கு கட்டணமாக கொடுத்து தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்த அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப்பின் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அகதிகளாக பதிவு செய்யப்படவுள்ளனர்.

