போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி.. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது..!
போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி.. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது..!

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த குடியாத்தம் கூட்டுறவு வங்கி பெண் மேலாளரை வணிகவரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (38). இவர், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலூர் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், 2018 - 2019-ம் ஆண்டுகளில் குடியாத்தம் கிளையில் மேலாளராக பணியாற்றிய போது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது வங்கி தணிக்கையில் தெரியவந்தது.
இதையடுத்து, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி கொடுத்த புகாரின் பேரில், வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால், உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வணிக குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் உமா மகேஸ்வரி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் சென்னை, வேலூர், காட்பாடியில் வீடு, வீட்டு மனை வாங்கியதும் உறுதியானது.
இதையடுத்து வணிக குற்றப்பிரிவு போலீசார், உமா மகேஸ்வரியை இன்று கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

