திமுகவில் இருந்து கடலூர் எம்.எல்.ஏ நீக்கம்..
திமுகவில் இருந்து கடலூர் எம்.எல்.ஏ நீக்கம்..

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் திமுகவின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்ட விவகாரத்தில் கடலூர் எம்.எல்.ஏ. கோ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியை குவித்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனுதாக்கல் செய்து வெற்றி பெற்றார்.
இதேபோல், கடலூரில் மாநகராட்சி மேயர் தேர்தலின்போது வேட்பாளராக சுந்தரி என்பவரை திமுக தலைமை அறிவித்தது. ஆனால், சுந்தரி மீதான அதிருப்தி காரணமாக திமுகவைச் சேர்ந்த மாவட்ட பொருளாளர் குனசேகரின் மனைவி கீதா என்பவர் மாற்று வேட்பாளராக போட்டியிட செய்தார். இதன் பின்னணியில் திமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ அயப்பன் இருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தலில் வாக்களிக்காமல் தடுப்பதற்காக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டு ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதற்கு இடையே, சுந்திரி மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்றார். கீதா குணசேகரன் 12 வாக்குகள் பெற்று 7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சிலர் போட்டியிட்ட விவகாரத்தில் திமுக தலைமை கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் அதிரடியாக கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும் கடலூர் எம்.எல்.ஏ. கோ. அய்யப்பன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
newstm.in

