கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகை கடன் தள்ளுபடி பெற்ற அரசு ஊழியர்களுக்கு செக்..!!
கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகை கடன் தள்ளுபடி பெற்ற அரசு ஊழியர்களுக்கு செக்..!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். அதன்படி திமுக ஆட்சியை பிடித்த நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார்.
அதன்படி கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், அரசு ஊழியர்கள், கூட்டுறவு வங்கிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பத்தினர் இச்சலுகை பெற முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து முறைகேடாக 37,984 பேர் பெற்றிருந்த ரூ.160 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தணிக்கையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் யார், யார் எந்தெந்த துறையில் பணிபுரிகிறார்கள் என்பதை, அவர்களுக்கான பணி நியமன எண்ணை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், கோவை மாவட்டத்தில் 1,079 பேர் நகை கடன் தள்ளுபடி பெற்றிருக்கின்றனர். இவர்களது விபரம் அறிந்ததும், அந்தந்த கூட்டுறவு வங்கிகள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு, பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பல ஊழியர்கள், கடன் தொகையை செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், “சமீபத்தில் தமிழக அரசு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ததில் பல்வேறு அரசு துறை ஊழியர்கள், அதிகாரிகள் பலரும் நகை கடன் தள்ளுபடி பெற்றிருக்கின்றனர். தள்ளுபடி ரத்து செய்யப்பட்டதால், அவர்களிடம் கடன் தொகை வட்டியுடன் திரும்பப் பெறப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் திருப்பி செலுத்தாவிட்டால், அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்படும். அந்தந்த துறை வாயிலாக, வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

