டிஎஸ்பி மீது லாரி ஏற்றி படுகொலை.. சுரங்க மாஃபியா கும்பல் அட்டூழியம்..!
டிஎஸ்பி மீது லாரி ஏற்றி படுகொலை.. சுரங்க மாஃபியா கும்பல் அட்டூழியம்..!

ஹரியானா மாநிலத்தில், சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கச் சென்ற டிஎஸ்பி மீது சுரங்க மாஃபியா கும்பல் ஒன்று பட்டப்பகலில் லாரியை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில், ஆரவல்லி மலைத்தொடரின் அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய்க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் அவர், போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். போலீசாரை கண்டதும், சட்டவிரோத சுரங்கத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
அப்போது அந்த அதிகாரி நடுவழியில் நின்று கொண்டு, கல் ஏற்றிச் சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டினார். ஆனால், அதில் ஒரு லாரியின் டிரைவர் அவர் மீது லாரியை ஏற்றினார். இதில் அந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் உறுதியளித்ததோடு, அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
2021 - 2022-ம் ஆண்டுக்கான ஹரியானா பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2014 - 2015 முதல் 2021 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், முறையான அனுமதி ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்களை வெட்டி செல்வது உட்பட மொத்தம் 21,450 சட்டவிரோத சுரங்க வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி, ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் பல இடங்களில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

