அரசு உயரதிகாரிகளால் உயிருக்கு ஆபத்து.. பெண் மருத்துவர் வீடியோவில் கதறல் !!
அரசு உயரதிகாரிகளால் உயிருக்கு ஆபத்து.. பெண் மருத்துவர் வீடியோவில் கதறல் !!

உயரதிகாரிகளின் முறைகேட்டுக்கு துணை போகாததால் தனக்கும், தனது குழந்தைக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக அரசு மருத்துவர் வீடியோ வெளியிட்டு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் பெமிலா. இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு, முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முறைகேடுகளை தட்டி கேட்டுள்ளார். இதனால் உயரதிகாரிகளால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்கு இடையே மீண்டும் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையி பெமிலா வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு விதமான ஊழல்கள் நடந்து வருகின்றன என்றும் இதற்கு முக்கிய காரணம் நாகர்கோவில் சுகாதார பணிகள் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் என்றும் கூறியுள்ளார். இவர் 2009 முதல் 2019 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே இடத்தில் தனது சொந்த ஊரில் நிர்வாக பணியில் அரசு விதிக்கு மாறாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவருக்கு துணை போகின்ற வட்டார மருத்துவ அலுவலர்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் நியமித்துள்ளார். அவர்களும் 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் அரசு விதிக்கு மாறாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருவதாகவும் இவர்கள் மக்களுக்கான அரசு நிதியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்து வருவகவும் பெமிலா குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவமனைக்கு வராமலே மக்கள் வரி பணத்தில் சம்பளம் பெறுகின்றனர். லஞ்சம் பெற்று கொண்டு மருத்துவ பணியிட மாற்றம் என்ற பெயரில் இன்னொரு மருத்துவருக்கு விற்று அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். ஒழுங்கான முறையில் சிறப்பாக பணிபுரிந்து உயரதிகாரிகளுக்கு கப்பம் கட்டாத மருத்துவர்களை தொடர்ந்து பல வழிகளில் துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் செய்யும் அநீதிக்கு துணை போகாத தன்னை பெண் மருத்துவர் என்றும் பாராமல் பணி இடத்திற்கு செல்ல விடாமலும் தனக்கும் தனது 6-வயது மற்றும் 3-வயது குழந்தைகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதார துறையில் நடக்கும் இந்த ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பெமிலா கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் டாக்டர் மதுசூதனன் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்றும் வீடியோவில் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டு தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக பெமிலா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

