இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்.. புதிய அதிபர் திடீர் உத்தரவு !!
இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்.. புதிய அதிபர் திடீர் உத்தரவு !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
அங்கிருந்த பொருட்களை கண்டு வியந்ததோடு பல அரங்குகளை அடித்து நொறுக்கினர். ஆனால், அதற்கு முன்பாகவே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய கோத்தபய, கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராணுவ தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்து பின்னர் தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பியோடினர்.
இதையடுத்து, கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டனர். அப்போது நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20ஆம் தேதி நடக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கோத்தபயவை மாலத்தீவு நாட்டு ராணுவ அதிகாரிகள் அங்குள்ள ரகசியத் தீவு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அந்த தீவில் உள்ள மாளிகையில் கோத்தபயவும், அவரது மனைவியும் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே,இலங்கையில் பதற்றம் நீடித்து வருகிறது. நாட்டின் சில மாகாணங்களில் போராட்டம், வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளார். இதை தன்னிடம் கோத்தபய தெரிவித்ததாக சபா நாயகர் யாபா அபேவர்த்தனா கூறினார். வரும் 20ஆம் தேதி வரை இப்பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கையின் அரசு தொலைகாட்சியான ரூபவாஹிணி தொலைகாட்சி மூலம் மக்களிடம் பேசிய ரணில் விக்கரமணசிங்க, ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அரசின் சொத்துகளை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் மாளிகையை மீட்க வேண்டும்.
சில முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத் தளபதிகள், காவல்துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது, என்றார்.

நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து போலீசார், ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசு பங்களாக்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பதற்றமான சூழல் இருப்பதால் மேலும் கலவரம் வெடிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
newstm.in

