மீண்டும் அவதூறு.. நீதிமன்ற உத்தரவு மீறல்.. சாட்டைக்கு வழங்கிய ஜாமீன் ரத்து..!
மீண்டும் அவதூறு.. நீதிமன்ற உத்தரவு மீறல்.. சாட்டைக்கு வழங்கிய ஜாமீன் ரத்து..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன், இனிமேல் அதுபோல அவதூறாக பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியதன் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
எனினும், மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடியூபில் பரப்பியதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புகழேந்தி, “மனுதாரர், நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்த இரண்டாவது நாளிலேயே மீண்டும் அவதூறாக பேசியுள்ளார்.
இதன்மூலம், நீதிமன்ற உத்தரவை மனுதாரர் மீறியது உறுதியாகிறது. ஆகவே, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், யூடியூப் ஒப்பந்த விதிகளை மீறுகையில், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்பட்டால் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அவர்களும் குற்றவாளிகளே. ஆகவே, நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக வலைதளங்கள் மீதும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்” என்று உத்தரவிட்டார்.

