துணை ஆட்சியர் காரில் ரூ. 40 லட்சம் லஞ்சப்பணம்.. போலீசார் அதிரடி !!
துணை ஆட்சியர் காரில் ரூ. 40 லட்சம் லஞ்சப்பணம்.. போலீசார் அதிரடி !!

திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்ல முயன்ற கணக்கில் வராத ரூபாய் 40 லட்சம் ரொக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியது.
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணி, ஆதிதிராவிட நலத் துறையில் காலியாக உள்ள சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு திருச்சி பகுதியில் லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டு திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக லஞ்ச ஊழல் தடுப்பு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் உடனே களத்தில் இறங்கினர். லஞ்ச ஊழல் தடுப்பு காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணத்துடன் ஆதிதிராவிட நலத் துறை துணை ஆட்சியர் சரவணகுமார் சென்னைக்கு செல்வதாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எல்லையான மடப்பட்டு பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் இருந்த ஒரு கட்டை பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக துணை ஆட்சியர் சரவணகுமார் மற்றும் கார் ஓட்டுநர் மணி ஆகியோரிடம் காவலர்கள் விசாரித்தனர். இருப்பினும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது .
முதற்கட்ட விசாரணையில் காரில் மொத்தம் 40 லட்சம் ரூபாய் திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இருப்பினும் இந்த பணம் யாருக்கு? எதற்காக? கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியவில்லை. கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்ததால் அந்த ரூ. 40 லட்சம் ரொக்கம் மற்றும் காரையும் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லஞ்சப்பணமா என்றும் விவசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள், துணை ஆட்சியரின் காரிலிருந்து ரூ. 40 லட்சத்தை பறிமுதல் செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

