சத்தியப் பிரமாணம் செய்துதான் ஸ்டாலின் பதவியேற்றாரா..?: சந்தேகம் கிளப்புகிறார் அண்ணாமலை..!
சத்தியப் பிரமாணம் செய்துதான் ஸ்டாலின் பதவியேற்றாரா..?: சந்தேகம் கிளப்புகிறார் அண்ணாமலை..!

“அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்து விட்டுத்தான் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றாரா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என்று, தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் நேற்று விடுதலை செய்தது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் மற்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம்; ஆனால், விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல” என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “பாஜகவை பொறுத்தவரையில் 7 பேருமே குற்றவாளிகள் தான். காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. சிறையில் இருந்து வெளிவந்தவரை கொண்டாடுவது, வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைக்கிறது.
நீதிமன்ற உத்தரவில் பேரறிவாளன் நிரபராதி என எங்கும் குறிப்பிடவில்லை, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளனர். நிரபராதியை விடுவித்தது போல முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நடந்து கொள்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து விட்டுதான் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றாரா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம்; ஆனால், விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும்” என்று, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

