தினமலர் பதிப்பாசிரியர் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
தினமலர் பதிப்பாசிரியர் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

தினமலர் நிறுவனர் ராமசுப்பையரின் மூத்த மகன் வெங்கடபதி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 91.
நாகர்கோவில் எஸ்எல்வி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பிஎஸ்சி முடித்தார். சென்னை ஐஐடியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்த இவர், உதவி பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

1956-ல் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்து பின்னர் பி.எச்டி. முடித்தார். அத்துடன் தினமலர் நாளிதழின் நெல்லை மற்றும் நாகர்கோவில் பதிப்பின் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்த இவர், இன்று காலை 7.20 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை கண்ணம்மாபேட்டையில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது.

வெங்கடபதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தினமலர் நிறுவனர் திரு. டி.வி.ஆர் அவர்களின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியராக இருந்தவருமான திரு.வெங்கடபதி அவர்கள் இன்று (11- 04- 2022) காலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

