மாணவர் சேர்க்கையின் போது இதை செய்யுங்க.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
மாணவர் சேர்க்கையின் போது இதை செய்யுங்க.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையம் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் “10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் மாணவர் பெயர், தாய், தந்தையர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர் சேர்க்கைப் பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்தல் வேண்டும்.
2020 - 2021-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் மாணவரது பெயர், தாய், தந்தை பெயர் ஆகியவற்றை தமிழ், ஆங்கிலத்தில் பதிவுசெய்து வழங்குவதற்கு ஒரே மாதிரி படிவத்தினை பயன்படுத்துதல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு, மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன.
பெயர்ப் பட்டியல், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெயர், தாய், தந்தை / பாதுகாவலர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை EMIS இல் பதிவேற்றம் செய்யும் போது எவ்வித தவறும் இல்லாமல் சரியாகப் பதிவு செய்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
மேலும், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், சேர்க்கை நீக்கல் பதிவேடு, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய், தந்தை, பாதுகாவலர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), தாய்மொழி ஆகிய இனங்கள் புதிதாக EMISஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்கை விண்ணப்பம், மாணவர் சேர்க்கைப் பதிவேடு, பள்ளி மாற்றுச் சான்றிதழில் மாணவரது பெயர், தாய், தந்தை, பாதுகாவலர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகிய விவரங்களைத் தவறின்றி தெளிவாகப் பதிவுசெய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

