அதிகரிக்கிறதா ஆண்மை குறைவு..?: ஆலோசனை கேட்டு வரும் தம்பதிகள் அதிகரிப்பு..!
அதிகரிக்கிறதா ஆண்மை குறைவு..?: ஆலோசனை கேட்டு வரும் தம்பதிகள் அதிகரிப்பு..!

கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிய நேரிட்டதால் ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் மனநலம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடக்கிறது. இந்த ஆய்வுகளில் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நேற்று வெளியான ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சிகரமாக மாறி உள்ளது. அதாவது கொரோனா பாதித்த ஆண்களில் பெரும்பாலானோருக்கு ஆண்மைத் தன்மை குறைந்துள்ளதும், இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகி வருவதாகவும் அந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு மருத்துவர்களிடம் கருத்து கேட்ட போது அவர்களும் அதை உறுதி செய்தனர். சமீபகாலமாக தம்பதி சகிதமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் இந்த பிரச்சினைக்காகவே வருவதாக சொல்கிறார்கள்.
இந்த ஆய்வு குறித்து மும்பை டாக்டர் பிரகாஷ் கோத்தாரி கூறுகையில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது கணவன் - மனைவி பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொரோனா குணம் அடைந்த பிறகும் தாம்பத்திய உறவுகளில் பிரச்சனை ஏற்பட்டது.
இது, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை, சச்சரவுகளை உருவாக்கி உள்ளது. வீட்டில் இருந்து பணிபுரிய நேரிட்டதால் அதுவும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட காரணமாகி விடுகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்” என்று தெரிவித்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் பத்மினி பிரசாத் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களில் கணிசமானோருக்கு ஆண்மைத்தன்மையில் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது, தம்பதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மைதான்” என்றார்.
டாக்டர் சஞ்சய் கூறுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு கொரோனா பாதிப்பால் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. அது, தாம்பத்ய வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார்.
தாம்பத்தியம் தொடர்பாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வருபவர்களில் பெரும்பாலான பெண்கள் கொரோனா தாக்கத்திற்கு பிறகு தங்களது இல்லற வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மனநல சிகிச்சைகள் நாடு முழுவதும் அதிகரித்து இருப்பதும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

