ஈபிஎஸ் நடவடிக்கை.. “நமது அம்மா” நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் !
ஈபிஎஸ் நடவடிக்கை.. “நமது அம்மா” நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் !

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமைக்குக் கொண்டு வரும் முயற்சியை ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் மூலம் தடுத்திருந்தாலும், நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு - பொதுக்குழுவுக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான “நமது அம்மா” நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளனர்.
நேற்று வரை நமது அம்மா நாளிதழின் பதிப்பில் நிறுவனர்கள் என்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. பொதுக்குழுவிற்கு பிறகு வெளியான பதிப்புகளிலும் இந்த நிலையே தொடர்ந்து வந்த நிலையில் இன்று வெளியான நாளிதழில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாமல் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டுமே நிறுவனர் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இன்று வெளியான நாளிதழ் முழுமையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்துகளால் நிரப்பட்டுள்ளது. ஈபிஎஸ் தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் பேட்டி ஆகியவையே முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
newstm.in

