தேர்தல் சுவாரஸ்யம்.. தாய், மகன் அடுத்தடுத்த வார்டில் வெற்றிபெற்று அசத்தல் !!
தேர்தல் சுவாரஸ்யம்.. தாய், மகன் அடுத்தடுத்த வார்டில் வெற்றிபெற்று அசத்தல் !!

நகராட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தாய் மற்றும் மகன் இருவருமே வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 18ஆவது வார்டில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயா(62) என்ற பெண் வெற்றிபெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டு அதிமுகவை சேர்ந்த பிரதீபாவை 408 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். விஜயா முதன் முறையாக நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
இதே போன்று 27வது வார்டில் திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சி சார்பில் விஜயாவின் மகன் ஜோதிபாசு போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட செண்பகராஜ் என்ற சுயேட்சை வேட்பாளரை 58 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். ஜோதிபாசு ஏற்கனவே 3முறை நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ள நிலையில் 4வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இவர்கள் இருவரும் தாய், மகன் ஆவர். ஒரே நகராட்சியில் தாய், மகன் என இருவரும் வெற்றி பெற்றுள்ளதால் இருவருக்கும் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 3 முறை ஜோதிபாசு 28ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இருந்தார். ஆனால், நகர்மன்ற வார்டு மறுசீரமைப்பில் அந்த வார்டு 18ஆவது வார்டாக மாற்றப்பட்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த வார்டில் தனது அம்மாவை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
3 முறை நகர் மன்ற உறுப்பினராக இருந்து தனது வார்டில் பல்வேறு பணிகளை செய்துள்ளதால், இந்த முறையும் மக்கள் தனக்கு பதிலாக தனது தாயை தேர்ந்தெடுத்துள்ளதாக ஜோதிபாசு கூறினார்.
newstm.in

