ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்.. சொல்கிறார் டி.டி.வி.தினகரன்..!
ஸ்டாலின் கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம்.. சொல்கிறார் டி.டி.வி.தினகரன்..!

“திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்” என, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட திருவெறும்பூர் ஒன்றிய அமமுக செயலாளர் ஆனந்தராஜ். இவருடைய சகோதரர் சதீஷ்குமாரின் மனைவி திவ்யா கடந்த வாரம் காலமானார்.
இதையடுத்து, திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள திவ்யாவின் குடும்பத்தினரை சந்தித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், “வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக, ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ (எடப்பாடி பழனிசாமி) மாதிரி செயல்படக் கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள்.
ஜாதி, மத பேதமில்லாத அதிமுகவில் ஜாதி, மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்தும் அளவிற்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.
பிரமாண்டமாக படம் எடுப்பதைப் போல, பெரும் பொருட் செலவில் பிரமாண்டமாக செலவு செய்து பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தானே அறிவித்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக இன்று வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தீயவர்களோடு பயணிக்கக் கூடாது என்பதற்காகவும், அம்மாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் எனவும் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனும் கட்சியை அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உருவாக்கியுள்ளோம்.
ஜனநாயக முறைப்படி நாங்கள் வெற்றி பெற்று உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தினார் என்பதை வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார்.
அந்த பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். ஏன், திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்.
எனக்கு எடப்பாடி பழனிசாமி மேல் எதிர்ப்பு உணர்வு கூட கிடையாது. அவர்களுடைய செய்கையை கண்டிக்கிறோம், அவ்வளவு தான்.
எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி உருவாகியிருக்கிறார். ராஜபக்சே குடும்பம் எப்படி சிலோனை விட்டு ஓடினார்களோ, அதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும்.
இன்றைக்கு யாரையெல்லாம் தன்வசப்படுத்தி எடப்பாடி பழனிசாமி இந்த நிலையை அடைந்தாரோ, அவர்களாலேயே அம்மாவுடைய இயக்கத்தை விட்டு அவர் விரட்டப்படும் காலம் விரைவில் வரும்” என்றார்.

