கள்ளக்காதலன் மீது பொய் புகார்.. அபிராமி மீது பாய்ந்தது போக்சோ..!
கள்ளக்காதலன் மீது பொய் புகார்.. அபிராமி மீது பாய்ந்தது போக்சோ..!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி (36). இவருக்கும், இவருடைய கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் பள்ளி படிக்கும் மகள் மற்றும் மகனுடன் அபிராமி தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் (39) என்பவருக்கும் அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் திடீரென அபிராமிக்கும் அவரது கள்ளக்காதலன் ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தனது மகளுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அபிராமி புகார் அளித்திருந்தார்.

மேலும், ஜார்ஜ் பெர்ணான்டஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
இதையடுத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது போக்சோ உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஓராண்டுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் அபிராமியும் ஜார்ஜ் பெர்னாண்டஸும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அபிராமியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸை காப்பாற்றுவதற்காக, அவர் மீது பொய்யான போக்சோ புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் அபிராமி கூறியுள்ளார்.
இதையடுத்து, பொய்யான புகார் கொடுத்ததற்காக அபிராமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர், அபிராமி மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த 2018-ம் ஆண்டு ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கும் தனக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான போக்சோ புகார் கொடுத்ததாகவும், தற்போது தானும் அவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதால் உண்மையை நீதிமன்றத்தில் கூறியதாகவும் தெரிவித்தார்.

