பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. திருவள்ளூரில் பரபரப்பு..!
பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. திருவள்ளூரில் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர். பிரபல ரவுடியான இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாகவும், நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தலைமறைவான ஜவஹரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், வேம்பாக்கம் பள்ளம் பகுதியில் ஜவஹரை கத்தியால் குத்தியும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜவஹர் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

