பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர், அரசியல்வாதிகள் இரங்கல்..!
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர், அரசியல்வாதிகள் இரங்கல்..!

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், கமல்ஹாசன், ஊர்வசி, நாகேஷ், கிரேசி மோகன் உள்ளிட்ட பலர் நடித்து 1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’.
இந்தப் படத்தில், திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதன கோபால், சமையல்காரர் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு என்று, நான்கு வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
இதில், கமல்ஹாசன் மதனுக்கு வேலைக்காரனாக ‘பீம் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரவீன் குமார். 1947-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த இவர், 1988-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மகாபாரதம்’ தொடரில் பீமனாக நடித்திருந்தார். இந்த தொடரில் மூலம், மக்களிடையே இவர் பிரபலமாக பேசப்பட்டார்.

அதுமட்டுமின்றி, சிறந்த வட்டெறிதல் விளையாட்டு வீரருமான இவர், 1967-ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அதன் பின்னர், 1970-ம் ஆண்டு நடந்த போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தார். இதனை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டிகளிலும் இவர் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளார். இதனால் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இவர் சுமார் 6.5 அடி உயரத்தில் இருந்த காரணத்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1981-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ரட்சா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு ‘மேரி சபான்’, ‘நாக பன்தி’, ‘அதிகார்’, ‘மிட்டி ஆவூர் சோனா’, ‘டக் பங்களா’, ‘பன்னா’ என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் இவர், 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அதோடு அந்த கட்சி சார்பாக டில்லி பஜ்ஜித்பூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோற்று விட்டார். அதன் பின்னர், ஓரிரு வருடங்கள் கழித்து பாஜகவில் இணைந்தார்.

சமீப காலமாக இவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு, அவருடைய உயிர் பிரிந்ததாக அவரது மகள் நிகுநிகா தெரிவித்துள்ளார். பிரவீன் குமார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

