பிரபல பின்னணிப் பாடகி மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..!
பிரபல பின்னணிப் பாடகி மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..!

பிரபல பின்னணிப் பாடகியும், கர்நாடக இசைக் கலைஞருமான சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.
சங்கீதா சஜித், தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். தமிழில், ‘மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய ‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை..’ என்ற சூப்பர் ஹிட் ஆனது.

1998-ம் ஆண்டு வெளிவந்த ‘என்னு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி’ திரைப்படத்தில் இருந்து ‘ஆம்பிலி பூவேட்டம்..’ பாடலின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ எனும் படத்தில் சங்கீதா சஜித் பாடிய ‘தாளம் போய் தப்பும் போய்..’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பழம்பெரும் பாடகி கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘ஞானப்பழத்தை பிழிந்து..’ பாடலை சிறப்பாக பாடி பலரிடம் பாராட்டு பெற்றார். அந்த வகையில், தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சங்கீதா இந்தப் பாடலைப் பாடியதைப் பார்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவரைப் பாராட்டி 10 சவரன் தங்க சங்கிலி பரிசளித்தார்.
சங்கீதா சஜித், கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கீதா சஜித் நேற்று (22-ம் தேதி) உயிரிழந்தார். அவருக்கு அபர்ணா என்ற மகள் உள்ளார். சங்கீதா சஜித் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

