ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை?
ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை?

ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் அனைவரும் பயன்பெற்று வந்தனர்.
ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் பயணக் கட்டண சலுகை வழங்கவும், அதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கவும் ரயில்வே வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டும் கட்டண சலுகை வழங்கப்படும். இதனால் மூத்த குடிமக்களுக்கான சலுகை முற்றிலுமாக நீக்கப்படாது. அதேநேரம் ரயில்வேக்கான சுமையும் குறையும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஏ.சி. அல்லாத தூங்கும் வசதி மற்றும் பொதுப் பெட்டி பயணிகளுக்கு மட்டும் பயணக் கட்டண சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 70 சதவீத பயணிகளுக்கு சலுகை கிட்டிவிடும் என்று கூறப்படுகிறது. அனைத்து ரயில்களிலும் 'பிரீமியம் தட்கல்' அதேபோல, கடைசிநேர பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்க உதவும் 'பிரீமியம் தட்கல்' முறையை அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தவும் பரிசீலிக்கப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் பரிசீலனையிலேயே இருப்பதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், சலுகைகளால் ரயில்வேக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. எனவே மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் சலுகைகளை விரிவுபடுத்துவது விருப்பத்துக்குரியது அல்ல, என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in

