மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் மத்திய அரசு எச்சரிக்கை!!
மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் மத்திய அரசு எச்சரிக்கை!!

5 மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா, மிசோரம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மேற்கண்ட மாநிலங்களில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அம்மாநிலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாள்களாக நாட்டில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதேவேளை குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 2,321 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் புதிய பாதிப்புகளில் 31.8 சதவீதமாகும். மேலும் கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதமும் 13.45 சதவீதத்திலிருந்து 15.53 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் மிசோரம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 814 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் ஒரே வாரத்தில் 794 புதிய பாதிப்புகளும், டெல்லியில் 724 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளது.
இந்த அனைத்து மாநிலங்களும் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட்டும் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்கள் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி, விதிமுறைகளை பின்பற்றல் என 5 யுக்திகளை பயன்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டியுள்ளது.
newstm.in

