வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்க.. தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்..!
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்க.. தமிழக சுகாதாரத்துறை அட்வைஸ்..!

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரிக்காத வகையில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மேலும், 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை குறித்த காலத்திற்குள்ளாக செலுத்தாத நிலையில் அவர்களுக்கான தடுப்பூசி செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும்.
இதுபோலவே, முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் ஆகியவற்றை தீவிரப்படுத்தவும்.
தேவையான நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை உடனுக்குடன் எடுத்து நோய் பாதிப்பு கண்டறிதல், மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
உருமாறும் ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நோய் பரவல் குறைந்துள்ள நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுதல் வெகுவாக குறைந்து விட்டது.
அரசின் வழிகாட்டுதலான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் 93 சதவீதம் ஒமைக்ரான் BA-2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது; XE வகை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

