முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது தாக்குதல்!!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது தாக்குதல்!!

மீண்டும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்கிற கோரிக்கை எழுந்து நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவர்களுடைய ஆதரவாளர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்துவரும் நிலையில், வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்க இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயக்குமார், செம்மலை, வைகைச் செல்வன், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்தை முடித்துவிட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது திடீரென ஜெயக்குமாரின் காரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் கார் வேகமாக சென்றதால் சற்று நேரத்தில் நிலைமை சீரானது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் இன்றைய கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசப்படவில்லை என்றும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

