ஃபிரீ பயர் கேம் தகராறு.. கிராமத்தில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் !
ஃபிரீ பயர் கேம் தகராறு.. கிராமத்தில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் !

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெரிய கல்லப்பாடி அருகேயுள்ள அருந்ததியர் காலனி உள்ளது. அப்பகுதியில் உள்ள மாதா கோவில் அருகில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சிறுவர்கள் செல்போனில் ‘ஃ பிரீ பயர்’ என்ற கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் உள்ளிட்ட சிலர் மாதா கோவில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
‘பிரீ பயர்’ விளையாட்டை சிறுவர்கள் கூச்சலிட்டபடி விளையாடியதால், ஆத்திரமடைந்த செந்தமிழ், சிறுவன் விக்னேஷ் என்பவரை தாக்கியுள்ளார். பின்னர் இது அப்பகுதியில் பெரும் பிரச்சனையாக உருவானது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் செந்தமிழ் மீது தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில், இரு தரப்பினர் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பொது மக்கள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், செந்தமிழ் தரப்பினர் 20க்கும் மேற்பட்டோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று மாதா கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீடு, கடைகளை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த காந்தி, சங்கீதா பிரபா, சபரி, முத்து உள்ளிட்ட 7 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in

