அரசு பஸ்களில் இவர்களுக்கு இலவச பயணம்..!!
அரசு பஸ்களில் இவர்களுக்கு இலவச பயணம்..!!

அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் இலவசமாக பயணிக்கலாம். அரசின் இந்த உத்தரவை, போக்குவரத்துத் துறை டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பஸ்களில் பயணிக்கும்போது டிரைவர், கண்டக்டர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து போக்குவரத்துக் கழகங்களின் முதன்மைச் செயலர் மற்றும் தலைவர் கோபால் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி, நிறுத்தங்களில் பஸ்சுக்காக மாற்றுத்திறனாளி பயணிகள் நிற்கும்போது முறையாக பஸ்சை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.
ஒரு மாற்றுத்திறனாளி நின்றாலும் அவரை ஏற்றிச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்த வேண்டும். அதற்கு முன்பாகவோ, அதைத் தாண்டியோ நிறுத்தி இடையூறு செய்யக்கூடாது.
பஸ்சில் ஏறும் மாற்றுத்திறனாளியை இடமில்லை எனக் கூறி இறக்கிவிடக் கூடாது. மாற்றுத்திறனாளி இருக்கையில் வேறு யாராவது அமர்ந்திருந்தால் அவர்களை எழுப்பி, மாற்றுத்திறனாளியை அமரச் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது. சாதாரண கட்டண நகர அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அசல் தேசிய அடையாள அட்டை கொண்டு 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களின் துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகர பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் 2 பேருக்கும் உரிய இலவச பயணச்சீட்டை நடத்துநர் வழங்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பஸ்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி 75 சதவீதம் பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

