உயர் கல்வி வரை இலவசம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!
உயர் கல்வி வரை இலவசம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

பெண்களுக்கு உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற ஏழைத்தாய்க்கு 3 குழந்தைகளும் பெண்களாக பிறந்ததால் ஊர்மக்கள் தூற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி தனது 3 வயது மகளுக்கும், ஒன்றரை வயது குழந்தைக்கும் விஷம் நஞ்சு கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள சத்யா முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில் சத்யா உயிர் பிழைத்த நிலையில், 2 குழந்தைகள் உயிரிழந்து விட்டன. குழந்தைகளை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சத்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இடையில் மேலும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த சத்யா, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
சத்யாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சத்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்து அவரது மற்ற இரு பெண் குழந்தைகளையும் குறைந்தது பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை பெற்றுக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, பெண் குழந்தைகள் வீட்டின் பெண் தெய்வங்கள். அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். எனவே பெண் குழந்தைகளையும், அவர்களை பெற்ற தாய்களையும் தூற்றுவதை விடுத்து போற்றுவதற்கு சமூகம் முன்வர வேண்டும்.
அனைத்து பெண்களுக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்காக மாணவிகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

